Search This Blog

Thursday, February 4, 2010

கொக்கு


அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தேன். மின்வெட்டு காரணமாக பொழுது போகாமல் நாளிதழை எடுத்து புரட்டினேன். தலைவர் உண்ணாவிரதம், புதியகூட்டனியில் எதிர்கட்சி போன்ற செய்திகள் ஜவுளிக் கடை விளம்பரத்துடன் முதல் பக்கத்தில் இடம்பிடித்தாலும், மற்ற பக்கங்களில் கலர் படங்களுடன் இடம்பெற்ற இளம்பெண் கற்பழிப்பு, கல்லூரி பேராசிரியை மானபங்கம், டுவென்டி-டுவென்டி வெற்றி, சூப்பர் ஸ்டாரின் அடுத்தப் படம் போன்ற முக்கிய செய்திகளே சராசரி மனிதர்களை கவர்வது போல் ஒன்பதாம் வகுப்பு மாணவனான என்னையும் கவர்ந்து ஆடு போல் மேய்ந்தேன்.

நான்காம் பக்கம் கடைசியில் இருந்த ஒரு செய்தியை தற்செயலாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். நாளிதழில் வந்த செய்திக்கும் என் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.
அந்த செய்தியை முழுவதும் படித்துவிட்டு வீட்டு வாசலில் இருந்த கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு நேற்று முன்தினம் நடந்ததை நினைவில் கொண்டு வந்தேன்.

மாலை சுமார் 6 மணி இருக்கும் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்தது. அடை மழையின் காரணமாக வேலை முடிந்து வீட்டுக்கு போகும் தருவாயில் கொத்தனார் மற்றும் சித்தாள் என ஐந்து பேர் அடங்கிய கும்பல் ஒன்று என் வீட்டு வாசலில் ஒதுங்கினர்.


முப்பதுக்கும் மேற்ப்பட்ட கொக்குகள் எதிர் காற்றினால் பறக்க முடியாமல் வீட்டுக்கு எதிர்புறமிருந்த திடலில் வந்து அமர்ந்தன.

இதனை கண்ட ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் வைத்திருந்த கோணிப்பைகளில் இருந்த பொருட்களை எல்லாம் ஒரே பையினில் ஒன்று சேர்த்தனர். மீதமிருந்த பைகளை எடுத்துகொண்டு அடைமழை என பாராமல் வேலியினைத் தாண்டி ஆளுக்கு ஐந்து ஆறு என்று கொக்குகளை அள்ளிக்கொண்டு வந்து சற்று நேரத்தினில் அவர்கள் வைத்திருந்த கோணிப்பைகளில் அடைத்தார்கள்.

இந்த காட்சியை நானும் தம்பியும் என்னுடைய பாட்டியுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தோம். கொக்கு பிடிக்க சென்றவனில் ஒருவனுக்கு காலில் அடிபட்டு இரத்தம் கசிய என்னுடைய பாட்டி வீட்டில் இருந்த 'டெட்டால்'(Dettol) கொண்டு வந்து கனிவுடன்

"இந்தாப்பா இதை கொஞ்சம் போடு பட்டு போய்டும். தம்பி நீ காசி மகன் சின்னவன் தானே?" என்று அதில் ஒருவனை கேட்க.
"ஆமாங்க"
"காசி முகஜாடை அப்படியே இருக்கு உன்கிட்ட. எத்தனைடா தம்பி புடிச்சீங்க?"
"தெரிலம்மா கைல அம்புட்டத கொண்டு வந்தோம்"

'டெட்டால்'(Dettol) பாட்டிலை அடிப்பட்டவன் திருப்பி கொடுக்க, வாங்கியாவாறே என்னுடைய பாட்டி
"தம்பிங்களா ஒரு நாலு கொக்கு கொடுப்பா, புள்ளைங்க இருக்கானுங்க விரும்பி சாப்புடுவானுங்க"
"இல்ல இல்ல பாட்டி எங்களுக்கே இது போதாது, எங்க கூட்டாளிங்க எல்லாம் இருக்கானுங்க அவங்களுக்குனா கொடுக்கணும், நீங்க வேணும்னா இன்னும் நிறையா வந்து உட்காரும் பசங்கள போய் புடிச்சிக்க சொல்லுங்கம்மா" என்றான் கொஞ்சம் பருத்த உடல் கொண்டவன்.

"டேய் காசி மொவனே நீயாச்சும் சொல்லேன், உங்கப்பன் இன்னைக்கு நேத்து பழக்கமா?" என்று என் பாட்டி ஆரம்பிக்க அவர்கள் காதிலே வாங்கதவர்களாய் தூரலிலேயே புறப்பட்டனர்.
"கட்டைல போரவனுங்க, திங்குறது செரிக்குமா, பாவிப் பயலுக, புள்ளைங்க ஆசையா பாக்குதேன்னு தானே கேட்டேன், ரெண்டாவது கொடுத்துட்டு போலாம்ல அம்புட்டையும் தூக்கிட்டு போறானுங்க" வசைப் பாடத் துவங்கினாள் பாட்டி.

நாளிதழில் வந்த செய்தியை மறுபடியும் படிக்கிறேன்

டிசம்பர்-26 கும்பகோணம், விலங்கியல் ஆர்வலர் மற்றும் முன்னாள் வட்டாச்சியர் கோபிநாத் கொடுத்த தகவலின் அடிப்படையில், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த ரவி, பாஸ்கர், மருதகாசி, மணி மற்றும் சங்கர் ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களுடைய பைகளில் இருபதுக்கும் மேற்ப்பட்ட கொக்குகள் உயிரோடு இருப்பது தெரிந்து அவர்களை போலீசார் கைது செய்து கொக்குகளையும் உயிரோடு கைப்பற்றினர். பின்பு இவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டனர்.
தேசிய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் அபூர்வ வகை 'கிரேட் ஈக்ரெட்' கொக்குகளை பிடித்து துன்புறுத்தியதற்க்காக ஐந்து பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டனை என தீர்ப்பளித்தார் நீதிபதி ஜவகர். பொது நலனில் அக்கறை கொண்ட கோபிநாத் அவர்களையும் பாராட்டினார் நீதிபதி. கொக்குகள் தீயணைப்பு துறையினர் மூலம் பறவைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
என்ற செய்தியுடன் அந்த ஐந்து பேருடைய புகைப்படமும் குழுவாக கருப்பு வெள்ளையில் இடம்பெற்று இருந்தது.

இதனைக் கண்டவுடன் தான் அதிர்ச்சி அடைந்தேன்.

ஒருவேளை என் பாட்டியும் இதில் மாட்டி இருந்தால் என் குடும்ப மானம்? என்னவாகி இருக்கும்!.

தினக்கூலியான அவர்களுக்கு இந்த தொகை பெரிதானதாக இருக்குமே!

அழிந்து வரும் இனம் என அறியாமலும், சட்டங்களை தெரிந்து கொள்ளாமலும் இறைச்சிக்காக மட்டுமே வேட்டையாடும் இவர்களை போன்ற பாமர மக்களுக்கு எப்படி விளம்பரப்படுத்துவது?

இது போன்ற குழப்பமான கேள்விகள் என் மனதில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

அந்த கொக்குகளை போல் தான் இவர்களும் எதற்க்காக பிடிப்படுகிறோம் என்று தெரியாமல் பிடிப்பட்டதும்.

3 comments:

  1. enna nenachiyo adhu nalla iruku...

    innum better a muyarchi pannu...

    unakulla oru jeyakandhan olingirukan...

    avan velila kondu vaa...

    (idhu edhuvume nakkaluku solla la )

    nelson

    ReplyDelete
  2. a good attempt.. fine.. keep writing.. :)

    ReplyDelete