Search This Blog

Monday, March 1, 2010

சிவப்பு விளக்கு [Red Light]

மாலை நேரம், மங்கலான மின்வெளிச்சத்தில் அந்த மூங்கில் கொட்டகை கூடாரத்தின் உள்ளே நுழைந்தான் சங்கர்.

பாதி புதைந்து மீதி முகம் காட்டும் சோடா பாட்டில் மூடிகளையும், போலி ஐ.எஸ்.ஐ(I.S.I) முத்திரை பதித்த வெற்று தண்ணீர் பாக்கெட்டுகளையும் மிதித்து கொண்டு முன்னேறினான். கல்யாணியும், மார்க்கோபோலோவும் சில மேசைகளை அலாங்கரித்தனர். ஒரு மேசையில் இரண்டு வெற்று மானிட்டர் பாட்டில்களுடன் ஒரு தலையும் கவிழ்ந்து கிடந்தது.


"டேய் மாரி எழுந்திரிடா" அந்த தலைக்கு சொந்தக்காரனை உலுக்கினான் சங்கர்.

"ஹ்ம்ம் சொல்லு சங்கரு....., ஆபீஸ்லேந்து வந்துட்டியா......,"?

"என்னடா இன்னைக்கு பாட்டால் ஜாஸ்தியா இருக்கு? மாமூல் அதிகமோ?"

"மனசு கஷ்டமா இருக்கு சங்கரு" பாதி அழுகையுடன் மாரிமுத்து

"என்னடா கொஞ்சம் சத்தமா சொல்லுடா. ஆம்புலன்சு ஓட்டுறதுல என்னடா கஷ்டம்?"

"வர வர இந்த வேலைய புடிக்கலை சங்கரு........."

"நீ வேலை பாக்குற ஆபிசுல தாண்டா நானும் வேலை பாக்குறேன். B.Com., படிச்ச எனக்கே 3500 ரூவா தான் சம்பளம்,
உனக்கு 3000 ரூவா சம்பளம், அதுமட்டுமா சைடுல வேற உனக்கு கிடைக்குது. உன் காசுல தானடா எனக்கே மேட்டர் கிடைக்குது.அப்படி என்ன கஷ்டம் உனக்கு சொல்லு"


சொல்ல ஆயத்தம் ஆனான் மாரி.

அன்றைய தினம் காலை சுமார் பதினொரு மணி ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை துடைத்துக்கொண்டு இருந்தான். "மாரி பூந்தமல்லி ஹாஸ்பிட்டலுக்கு போ ஹார்ட் பெசெண்ட ஷிப்ட் பண்றாங்க"அலுவலகத்திலிருந்து சங்கர் சொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான் மாரி. ஒரு அறுபது வயது நோயாளி, டாக்டர், நர்ஸ் மற்ற மூன்று நபர்களுடன் போரூர் நோக்கி சென்றான்.

போக்குவரத்து துறை அமைச்சர் வருகிறார் என்று குண்டர்கள்(தொண்டர்கள்) பாதைகள் அமைத்து கொடுத்தனர். அந்த சலுகையை மாரியும் எடுத்துகொண்டு அமைச்சர் பாதையை பயன்படுத்தி அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவமனைக்கு சென்றான். வாகனத்தை மருத்துவமனை வெளியே நிறுத்திவிட்டு எதிரே இருந்த டீக்கடையில் பீடியை இழுத்துவிட்டு வழக்கம் போல் ஒரு மணி நேரம் கழித்து மருத்துவமனை உள்ளே சென்றான்.

ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே ஏழு பேர் நிற்க அவர்கள் அருகிலே நின்றான். வெளியே வந்த டாக்டர் "எல்லாம் நல்லவிதமா முடிஞ்சிடுச்சு, இனி பயப்புடுற மாதிரி ஒன்னும் இல்லை. ஈவினிங் உள்ள போய் பாருங்க டூ டேஸ் ICUல தான் இருக்கணும்" தாடியுடன் இருந்த அந்த உயரமான மனிதரிடம் சொல்லிவிட்டு மற்றொரு அறைக்கு சென்றார்.

"பேசண்ட் ரஹ்மத்துல்லாஹ்வுக்கு சொந்தக்காரங்க யாரவது இருக்கீங்களா" நர்ஸ் கேட்க அந்த உயரமானவர் தனியே வந்து நர்ஸ் கொடுத்த காகிதத்தை வாங்கி பார்த்து கொண்டிருந்த பொழுது.

மாரி அவர் அருகே சென்று வலது கையால் பிடரி தலை முடியை சொரிந்தவாறே "சார் வணக்கம். நான் தான் ஆம்புலன்சு ஓட்டிவந்தேன்...." என்று இழுத்தான்.

500 ருபாய் நோட்டுகளில் இரண்டை எடுத்து நீட்டினார் உயரமானவர். "தேங்க்சுங்க சார்" கடவாய் பல் தெரிய இளித்தான் மாரி.


மதியம் இரண்டு மணி, அவ்வப்போது சாப்பிடும் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தான் மாரி.

' ஜெய் ஹோ...ஜெய் ஹோ...' அலறிய செல்பேசியை எடுக்க. "ஆவடில தானே இருக்க? ஹைவேல போலீஸ் கோட்ரஸ் முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் சீக்கிரம் போ" சங்கர் சொல்லியதும் பாதி சாப்பிட்டு கொண்டிருந்த மாரி புறப்பட்டான்.சங்கர் குறிப்பிட்ட அந்த சாலையை வந்தவுடன் அங்கிருந்த கூட்டம் உறுதிப்படுத்தியது விபத்து நடந்த இடம் இதுவென்று.

எதற்க்காக கூட்டமென்று தெரியாமல் பொழுதினை போக்க கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் சிலர்,

"ச்ச.., பாவம் யாரு பெத்த புள்ளையோ" என்று தேவை இல்லாத அனுதாபம் தெரிவிக்கும் சிலர்,

"ஆண்டவா இந்த புள்ளைய காப்பாற்று" என்று முனுமுனுக்கும் சிலர்,

உதவி செய்யவேண்டும் என்று முனங்கலை வைத்துவிட்டு "நமக்கு எதுக்கு போலீஸ், கோர்ட் கேசு"ன்னு நினைத்து கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் ,

"தண்ணி கொண்டு வாப்பா, ஆம்புலன்சு வந்துடுச்சான்னு பாருங்க " என்று அடுத்தவர்களை ஏவும் சிலர் மற்றும் பலர் சூழ அந்த பெண் துடித்து கொண்டிருந்தாள்.

ஒரு காதிலே இரத்தம் வழிய மற்றொரு காதிலே ஹெட் செட் மாட்டி இருந்தது.
பாட்டு கேட்டுக்கொண்டே ஸ்கூட்டி ஒட்டி இருப்பால் போலும். தலைகவசம் அணியாததால் தலையில் அடிபட்டு இரத்தம் அதிகம் வெளியாகி இருந்தது.
அங்கிருந்த சிலர் உதவியுடன் அந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றி புறப்பட்டான் மாரி. வேகத்தை அதிகபடுத்திக்கொண்டு சீராக சென்ற மாரியை நிறுத்தியது ட்ராபிக். மாரி 'சயரன்' ஒலியை அதிகப்படுத்தியும் அங்கிருந்த வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளவில்லை.

ஆம்புலன்ஸ் முன் - கழுத்தினில் 'டை'யுடன் வாலிபர் திரும்பி பார்த்துவிட்டு அசராமல் இருந்தார். தலைக்கவசத்துடன் பின்னால் அமர்ந்திருந்த பெண், தலையினில் ஏதும் இல்லாத காதலனுக்கு ஏதோ அவள் சொல்ல காதலிக்காக வழிவிட்டான்.

மாரி வலது ஓரமாக திரும்பி முன்னேறினான். அடுத்த 20 நிமிடத்தில் மருத்துவமனையில் அந்த பெண்ணை சேர்த்துவிட்டு வெளியே நின்றுகொண்டு அந்த பெண்ணின் உறவினரை எதிர்நோக்கி இருந்தான்.

ஒருமணி நேரம் கழித்து ஒரு கும்பல் உள்ளே வருவதை மாரி கண்டான். உள்ளே சென்ற கும்பலை பின் தொடர்ந்தான்.

"அஞ்சு வருஷம் காதலிச்சு மூணு மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் பண்ணுனாங்க அதுக்குள்ள இப்படியா?" அந்த கும்பலில் ஒருவன் மற்றொருவனிடம் சொல்ல.

"பொண்ணுவீட்டுல தகவல் சொல்லிட்டீங்களா ?"

"எப்படி வருவாங்க? ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செஞ்சதால ரெண்டு குடும்பத்துலயும் இவங்களுக்கு தொடர்பு இல்லையே" அந்த கும்பல் பேசி கொண்டிருக்க.

"அனிதா என்னவிட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு" மருத்துவர் அறையிலிருந்து காதலனின் கதறல் கேட்டது.

தன்னுடைய வாகனத்தில் வந்த ஒருவர் இறந்து போனதால் கண் கலங்கினான் மாரி.
மற்றொரு 'சைரன்' சப்தம் கேட்டு திரும்பினான். இன்னொரு ஆம்புலன்ஸ் மருத்துவமனையை வந்தடைந்தது. ஆறு வயது சிறுவனை இரத்தம் வழிய உள்ளே தூக்கி சென்றார்கள்.

"நெல்சன் கண்ணு முழிச்சி பாருடா செல்லம். நெல்சன்., நெல்சன்.,,," துடித்துக்கொண்டே பின் தொடர்ந்தாள் தாய்.

"என்ன தம்பி பூந்தமல்லியா ?" வெள்ளை மீசையுடன் வழுக்கை விழுந்த அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்க

"ஆமாம்ன, இந்த பையனுக்கு என்ன ஆச்சு?" மாரி பரிதபமாய் கேட்க

"ஸ்கூல் ஆட்டோலேந்து தவறி விழுந்துட்டான் பையன், பத்து புள்ளைங்கள ஆட்டோல ஏத்திகிட்டு போனா? புள்ளைங்க என்ன படிக்குது? எப்படி போகுது வருதுங்குரது இப்ப பெத்தவங்களுக்கு கவலை இல்லையப்பா, இங்கிலீசு பேசுனா போதும்" சலித்துகொண்டார் மீசைக்காரர்.

உள்ளிருந்து "கர்த்தரே உனக்கு கூடவா இரக்கம் இல்லாம போச்சி, என் நெல்சன எங்கிட்டிருந்து பிரிச்சிட்டியே"தாயின் கதறல் அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

"வர வர ட்ராபிக் அதிகமா போச்சி தம்பி, ஒரு பயலும் ஆம்புலன்சுக்கு வழிவிட மாட்டேன்றானுங்க. கொஞ்சம் முன்னாடியே வரவேண்டியது பாவம் அல்பாய்சுல போய்ட்டான்" தோளில் இருந்த துண்டை கீழே உதறியவாறே கூறினார் அந்த டிரைவர்.

அன்று நடந்தவற்றை மாரி சங்கரிடம் சொன்ன பின்பு

"முடிச்சிட்டியா மாரி? மிசின மாட்டிக்கவா?" என்றான் செவி குறைப்பாடுள்ள சங்கர்.

"இவ்ளோ நேரம் நான் சொன்னத காதுல வாங்கலையா? செவிட்டு மிசின் இல்லாம தான் கேட்டியா நீ?"

"என்ன இன்னைக்கு நாலு பேரு போலச்சிக்கிட்டாங்க, ரெண்டு பேரு புட்டுகிட்டாங்கன்னு சொல்லுவா அதானே? எல்லாத்தையும் காது கேட்குறவங்க கிட்ட போய் சொல்லுடா" என்றான் சங்கர்.

மாரியும் தேடிக் கொண்டு தான் இருக்கிறான் காது கேட்பவர்களை.

'சிவப்பு விளக்கு' என்றால் மட்டும் சிறிது நிமிடம் செலவிடுபவர்கள் இந்த 'சிவப்பு விளக்கு வண்டி'யை கண்டால் மட்டும் சில நொடிகள் செலவழிக்க தயங்குவதேன்?










2 comments:

  1. அருமை.. நல்லா இருக்கு 'சிவப்பு விளக்கு'

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு நபில்.. முந்தைய கதையை விட நிறைய முன்னேற்றம் தெரியுது..... வாழ்த்துக்கள்........

    ReplyDelete