Search This Blog

Wednesday, October 2, 2013

சின்ன சின்ன விசயங்களை வாழ்க்கையில் மிஸ் பண்ணாதீங்க

முன்பொரு காலத்தில், எடுத்த  பொருளை எங்கே வைத்தோம் என்கிற சிந்தனை இல்லாத ஒரு முதலாளி வாழ்ந்து வந்தான். அந்த சோம்பேறி முதலாளி தொலைத்த பொருட்களை எல்லாம் கண்டு பிடிப்பது, அவனது அறையினை சுத்தம் செய்வது என்று 2 வருடமாக அவனிடம் ஒருவன் வேலை பார்த்து வந்தவன் ஒரு மாதம் விடுமுறையில்  வெளியூர் சென்றுவிட்டான். 

வேலைக்காரன் சென்ற ஒருவாரம் கழித்து

தமது அறையினை சுத்தம்  செய்து கொண்டு இருந்தான் முதலாளி. அப்பொழுது மூன்று நாட்களுக்கு முன்பு சாப்பிட்டு பாதி வைத்திருந்த ரொட்டி துண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்பிட்ட தட்டு, காபி குடித்த குவளை என எதுவும் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை அப்புறபடுத்தி கொண்டு இருந்தான். அப்பொழுது திடீரென்று நாபகம் வந்து அந்த ரொட்டி துண்டுகளை எடுத்துக்கொண்டு தனது ஆய்வகத்தில் சோதித்து பார்த்து கண்டுபிடித்தான் பெனிசிலின் நோட்டேட்டம் என்கின்ற மருந்தை.

Lazy Boss     =     Sir Alexander Fleming   (1881-1955)

Servant         =     Merlin Pryce                  (1902-1976)


Tuesday, October 1, 2013

நேர்மையான மரம்வெட்டி

முன்னொரு காலத்தில் நேர்மையான மரம்வெட்டி ஒருவன் இருந்தான்.  அவன் வேலைக்காக ஒரு பண்ணையாரிடம் சென்றான். அந்த பண்ணையாரோ மரம்வெட்டியை  அவருடைய தோட்டத்தினை காட்டி "இதோ எந்த இடங்களில் உள்ள மரங்களை வெட்டு" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

முதல் நாளில் 18 மரங்களை வெட்டினான் அந்த மரம்வெட்டி. அதனை கண்ட பண்ணையார். நீ நேர்மையோடும், கடினமாகவும் உழைக்கின்றாய்  என்று பாராட்டி சென்றார்.

மறுநாள் 15 மரங்களை வெட்டினான்.

மூன்றாம் நாள் 10 மரங்களை வெட்டினான்.

நாட்கள் செல்ல செல்ல வெட்டும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றது.

மறுமுறை பண்ணையார் அந்த தோட்டத்திற்கு வரும்போது அவரிடம் சென்ற மரம்வெட்டி "கடினமாக  தான் தினமும் உழைக்கின்றேன்   ஆயினும் என்னுடைய உடல் சக்தியை இழந்து விட்டது போலும், மனம் வருந்துகின்றேன் ஐயா" என்றான்.

இனிமேல் இங்கு வேலை செய்யும் தகுதியை இழந்துவிட்டேன் நான் செல்கின்றேன் என்றான் மரம் வெட்டி.

அவனது கோடாரியை வாங்கி பார்த்த பண்ணையார் "கடைசியாக எப்பொழுது தீட்டினாய்" என்று கேட்க.

"கோடரி தீட்டுறதா எங்க ஐயா நேரம், அந்த நேரத்துல ஒரு மரம் வெட்டிடலம்னு  தான் தீட்டளை" என்றான்

Author: Stephen Covey
From: 7 Habits of Highly Effective Peopleஅந்த மரம் வெட்டியை  போன்று தான் நாமும். தகுந்த விசயங்களுக்கு நேரம் ஒதுக்கி செயல் படாமல் வாழ்கின்றோம். 

நேரமில்லை என்று ஃபர்லான தொளுகையோடும் இபதத்துக்களோடும் நிறுத்திக்கொண்டு நிம்மதியடைகின்றோம்.Monday, March 1, 2010

சிவப்பு விளக்கு [Red Light]

மாலை நேரம், மங்கலான மின்வெளிச்சத்தில் அந்த மூங்கில் கொட்டகை கூடாரத்தின் உள்ளே நுழைந்தான் சங்கர்.

பாதி புதைந்து மீதி முகம் காட்டும் சோடா பாட்டில் மூடிகளையும், போலி ஐ.எஸ்.ஐ(I.S.I) முத்திரை பதித்த வெற்று தண்ணீர் பாக்கெட்டுகளையும் மிதித்து கொண்டு முன்னேறினான். கல்யாணியும், மார்க்கோபோலோவும் சில மேசைகளை அலாங்கரித்தனர். ஒரு மேசையில் இரண்டு வெற்று மானிட்டர் பாட்டில்களுடன் ஒரு தலையும் கவிழ்ந்து கிடந்தது.


"டேய் மாரி எழுந்திரிடா" அந்த தலைக்கு சொந்தக்காரனை உலுக்கினான் சங்கர்.

"ஹ்ம்ம் சொல்லு சங்கரு....., ஆபீஸ்லேந்து வந்துட்டியா......,"?

"என்னடா இன்னைக்கு பாட்டால் ஜாஸ்தியா இருக்கு? மாமூல் அதிகமோ?"

"மனசு கஷ்டமா இருக்கு சங்கரு" பாதி அழுகையுடன் மாரிமுத்து

"என்னடா கொஞ்சம் சத்தமா சொல்லுடா. ஆம்புலன்சு ஓட்டுறதுல என்னடா கஷ்டம்?"

"வர வர இந்த வேலைய புடிக்கலை சங்கரு........."

"நீ வேலை பாக்குற ஆபிசுல தாண்டா நானும் வேலை பாக்குறேன். B.Com., படிச்ச எனக்கே 3500 ரூவா தான் சம்பளம்,
உனக்கு 3000 ரூவா சம்பளம், அதுமட்டுமா சைடுல வேற உனக்கு கிடைக்குது. உன் காசுல தானடா எனக்கே மேட்டர் கிடைக்குது.அப்படி என்ன கஷ்டம் உனக்கு சொல்லு"


சொல்ல ஆயத்தம் ஆனான் மாரி.

அன்றைய தினம் காலை சுமார் பதினொரு மணி ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை துடைத்துக்கொண்டு இருந்தான். "மாரி பூந்தமல்லி ஹாஸ்பிட்டலுக்கு போ ஹார்ட் பெசெண்ட ஷிப்ட் பண்றாங்க"அலுவலகத்திலிருந்து சங்கர் சொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான் மாரி. ஒரு அறுபது வயது நோயாளி, டாக்டர், நர்ஸ் மற்ற மூன்று நபர்களுடன் போரூர் நோக்கி சென்றான்.

போக்குவரத்து துறை அமைச்சர் வருகிறார் என்று குண்டர்கள்(தொண்டர்கள்) பாதைகள் அமைத்து கொடுத்தனர். அந்த சலுகையை மாரியும் எடுத்துகொண்டு அமைச்சர் பாதையை பயன்படுத்தி அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவமனைக்கு சென்றான். வாகனத்தை மருத்துவமனை வெளியே நிறுத்திவிட்டு எதிரே இருந்த டீக்கடையில் பீடியை இழுத்துவிட்டு வழக்கம் போல் ஒரு மணி நேரம் கழித்து மருத்துவமனை உள்ளே சென்றான்.

ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே ஏழு பேர் நிற்க அவர்கள் அருகிலே நின்றான். வெளியே வந்த டாக்டர் "எல்லாம் நல்லவிதமா முடிஞ்சிடுச்சு, இனி பயப்புடுற மாதிரி ஒன்னும் இல்லை. ஈவினிங் உள்ள போய் பாருங்க டூ டேஸ் ICUல தான் இருக்கணும்" தாடியுடன் இருந்த அந்த உயரமான மனிதரிடம் சொல்லிவிட்டு மற்றொரு அறைக்கு சென்றார்.

"பேசண்ட் ரஹ்மத்துல்லாஹ்வுக்கு சொந்தக்காரங்க யாரவது இருக்கீங்களா" நர்ஸ் கேட்க அந்த உயரமானவர் தனியே வந்து நர்ஸ் கொடுத்த காகிதத்தை வாங்கி பார்த்து கொண்டிருந்த பொழுது.

மாரி அவர் அருகே சென்று வலது கையால் பிடரி தலை முடியை சொரிந்தவாறே "சார் வணக்கம். நான் தான் ஆம்புலன்சு ஓட்டிவந்தேன்...." என்று இழுத்தான்.

500 ருபாய் நோட்டுகளில் இரண்டை எடுத்து நீட்டினார் உயரமானவர். "தேங்க்சுங்க சார்" கடவாய் பல் தெரிய இளித்தான் மாரி.


மதியம் இரண்டு மணி, அவ்வப்போது சாப்பிடும் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தான் மாரி.

' ஜெய் ஹோ...ஜெய் ஹோ...' அலறிய செல்பேசியை எடுக்க. "ஆவடில தானே இருக்க? ஹைவேல போலீஸ் கோட்ரஸ் முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் சீக்கிரம் போ" சங்கர் சொல்லியதும் பாதி சாப்பிட்டு கொண்டிருந்த மாரி புறப்பட்டான்.சங்கர் குறிப்பிட்ட அந்த சாலையை வந்தவுடன் அங்கிருந்த கூட்டம் உறுதிப்படுத்தியது விபத்து நடந்த இடம் இதுவென்று.

எதற்க்காக கூட்டமென்று தெரியாமல் பொழுதினை போக்க கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் சிலர்,

"ச்ச.., பாவம் யாரு பெத்த புள்ளையோ" என்று தேவை இல்லாத அனுதாபம் தெரிவிக்கும் சிலர்,

"ஆண்டவா இந்த புள்ளைய காப்பாற்று" என்று முனுமுனுக்கும் சிலர்,

உதவி செய்யவேண்டும் என்று முனங்கலை வைத்துவிட்டு "நமக்கு எதுக்கு போலீஸ், கோர்ட் கேசு"ன்னு நினைத்து கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் ,

"தண்ணி கொண்டு வாப்பா, ஆம்புலன்சு வந்துடுச்சான்னு பாருங்க " என்று அடுத்தவர்களை ஏவும் சிலர் மற்றும் பலர் சூழ அந்த பெண் துடித்து கொண்டிருந்தாள்.

ஒரு காதிலே இரத்தம் வழிய மற்றொரு காதிலே ஹெட் செட் மாட்டி இருந்தது.
பாட்டு கேட்டுக்கொண்டே ஸ்கூட்டி ஒட்டி இருப்பால் போலும். தலைகவசம் அணியாததால் தலையில் அடிபட்டு இரத்தம் அதிகம் வெளியாகி இருந்தது.
அங்கிருந்த சிலர் உதவியுடன் அந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றி புறப்பட்டான் மாரி. வேகத்தை அதிகபடுத்திக்கொண்டு சீராக சென்ற மாரியை நிறுத்தியது ட்ராபிக். மாரி 'சயரன்' ஒலியை அதிகப்படுத்தியும் அங்கிருந்த வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளவில்லை.

ஆம்புலன்ஸ் முன் - கழுத்தினில் 'டை'யுடன் வாலிபர் திரும்பி பார்த்துவிட்டு அசராமல் இருந்தார். தலைக்கவசத்துடன் பின்னால் அமர்ந்திருந்த பெண், தலையினில் ஏதும் இல்லாத காதலனுக்கு ஏதோ அவள் சொல்ல காதலிக்காக வழிவிட்டான்.

மாரி வலது ஓரமாக திரும்பி முன்னேறினான். அடுத்த 20 நிமிடத்தில் மருத்துவமனையில் அந்த பெண்ணை சேர்த்துவிட்டு வெளியே நின்றுகொண்டு அந்த பெண்ணின் உறவினரை எதிர்நோக்கி இருந்தான்.

ஒருமணி நேரம் கழித்து ஒரு கும்பல் உள்ளே வருவதை மாரி கண்டான். உள்ளே சென்ற கும்பலை பின் தொடர்ந்தான்.

"அஞ்சு வருஷம் காதலிச்சு மூணு மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் பண்ணுனாங்க அதுக்குள்ள இப்படியா?" அந்த கும்பலில் ஒருவன் மற்றொருவனிடம் சொல்ல.

"பொண்ணுவீட்டுல தகவல் சொல்லிட்டீங்களா ?"

"எப்படி வருவாங்க? ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செஞ்சதால ரெண்டு குடும்பத்துலயும் இவங்களுக்கு தொடர்பு இல்லையே" அந்த கும்பல் பேசி கொண்டிருக்க.

"அனிதா என்னவிட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு" மருத்துவர் அறையிலிருந்து காதலனின் கதறல் கேட்டது.

தன்னுடைய வாகனத்தில் வந்த ஒருவர் இறந்து போனதால் கண் கலங்கினான் மாரி.
மற்றொரு 'சைரன்' சப்தம் கேட்டு திரும்பினான். இன்னொரு ஆம்புலன்ஸ் மருத்துவமனையை வந்தடைந்தது. ஆறு வயது சிறுவனை இரத்தம் வழிய உள்ளே தூக்கி சென்றார்கள்.

"நெல்சன் கண்ணு முழிச்சி பாருடா செல்லம். நெல்சன்., நெல்சன்.,,," துடித்துக்கொண்டே பின் தொடர்ந்தாள் தாய்.

"என்ன தம்பி பூந்தமல்லியா ?" வெள்ளை மீசையுடன் வழுக்கை விழுந்த அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்க

"ஆமாம்ன, இந்த பையனுக்கு என்ன ஆச்சு?" மாரி பரிதபமாய் கேட்க

"ஸ்கூல் ஆட்டோலேந்து தவறி விழுந்துட்டான் பையன், பத்து புள்ளைங்கள ஆட்டோல ஏத்திகிட்டு போனா? புள்ளைங்க என்ன படிக்குது? எப்படி போகுது வருதுங்குரது இப்ப பெத்தவங்களுக்கு கவலை இல்லையப்பா, இங்கிலீசு பேசுனா போதும்" சலித்துகொண்டார் மீசைக்காரர்.

உள்ளிருந்து "கர்த்தரே உனக்கு கூடவா இரக்கம் இல்லாம போச்சி, என் நெல்சன எங்கிட்டிருந்து பிரிச்சிட்டியே"தாயின் கதறல் அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

"வர வர ட்ராபிக் அதிகமா போச்சி தம்பி, ஒரு பயலும் ஆம்புலன்சுக்கு வழிவிட மாட்டேன்றானுங்க. கொஞ்சம் முன்னாடியே வரவேண்டியது பாவம் அல்பாய்சுல போய்ட்டான்" தோளில் இருந்த துண்டை கீழே உதறியவாறே கூறினார் அந்த டிரைவர்.

அன்று நடந்தவற்றை மாரி சங்கரிடம் சொன்ன பின்பு

"முடிச்சிட்டியா மாரி? மிசின மாட்டிக்கவா?" என்றான் செவி குறைப்பாடுள்ள சங்கர்.

"இவ்ளோ நேரம் நான் சொன்னத காதுல வாங்கலையா? செவிட்டு மிசின் இல்லாம தான் கேட்டியா நீ?"

"என்ன இன்னைக்கு நாலு பேரு போலச்சிக்கிட்டாங்க, ரெண்டு பேரு புட்டுகிட்டாங்கன்னு சொல்லுவா அதானே? எல்லாத்தையும் காது கேட்குறவங்க கிட்ட போய் சொல்லுடா" என்றான் சங்கர்.

மாரியும் தேடிக் கொண்டு தான் இருக்கிறான் காது கேட்பவர்களை.

'சிவப்பு விளக்கு' என்றால் மட்டும் சிறிது நிமிடம் செலவிடுபவர்கள் இந்த 'சிவப்பு விளக்கு வண்டி'யை கண்டால் மட்டும் சில நொடிகள் செலவழிக்க தயங்குவதேன்?


Thursday, February 4, 2010

கொக்கு


அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தேன். மின்வெட்டு காரணமாக பொழுது போகாமல் நாளிதழை எடுத்து புரட்டினேன். தலைவர் உண்ணாவிரதம், புதியகூட்டனியில் எதிர்கட்சி போன்ற செய்திகள் ஜவுளிக் கடை விளம்பரத்துடன் முதல் பக்கத்தில் இடம்பிடித்தாலும், மற்ற பக்கங்களில் கலர் படங்களுடன் இடம்பெற்ற இளம்பெண் கற்பழிப்பு, கல்லூரி பேராசிரியை மானபங்கம், டுவென்டி-டுவென்டி வெற்றி, சூப்பர் ஸ்டாரின் அடுத்தப் படம் போன்ற முக்கிய செய்திகளே சராசரி மனிதர்களை கவர்வது போல் ஒன்பதாம் வகுப்பு மாணவனான என்னையும் கவர்ந்து ஆடு போல் மேய்ந்தேன்.

நான்காம் பக்கம் கடைசியில் இருந்த ஒரு செய்தியை தற்செயலாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். நாளிதழில் வந்த செய்திக்கும் என் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.
அந்த செய்தியை முழுவதும் படித்துவிட்டு வீட்டு வாசலில் இருந்த கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு நேற்று முன்தினம் நடந்ததை நினைவில் கொண்டு வந்தேன்.

மாலை சுமார் 6 மணி இருக்கும் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்தது. அடை மழையின் காரணமாக வேலை முடிந்து வீட்டுக்கு போகும் தருவாயில் கொத்தனார் மற்றும் சித்தாள் என ஐந்து பேர் அடங்கிய கும்பல் ஒன்று என் வீட்டு வாசலில் ஒதுங்கினர்.


முப்பதுக்கும் மேற்ப்பட்ட கொக்குகள் எதிர் காற்றினால் பறக்க முடியாமல் வீட்டுக்கு எதிர்புறமிருந்த திடலில் வந்து அமர்ந்தன.

இதனை கண்ட ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் வைத்திருந்த கோணிப்பைகளில் இருந்த பொருட்களை எல்லாம் ஒரே பையினில் ஒன்று சேர்த்தனர். மீதமிருந்த பைகளை எடுத்துகொண்டு அடைமழை என பாராமல் வேலியினைத் தாண்டி ஆளுக்கு ஐந்து ஆறு என்று கொக்குகளை அள்ளிக்கொண்டு வந்து சற்று நேரத்தினில் அவர்கள் வைத்திருந்த கோணிப்பைகளில் அடைத்தார்கள்.

இந்த காட்சியை நானும் தம்பியும் என்னுடைய பாட்டியுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தோம். கொக்கு பிடிக்க சென்றவனில் ஒருவனுக்கு காலில் அடிபட்டு இரத்தம் கசிய என்னுடைய பாட்டி வீட்டில் இருந்த 'டெட்டால்'(Dettol) கொண்டு வந்து கனிவுடன்

"இந்தாப்பா இதை கொஞ்சம் போடு பட்டு போய்டும். தம்பி நீ காசி மகன் சின்னவன் தானே?" என்று அதில் ஒருவனை கேட்க.
"ஆமாங்க"
"காசி முகஜாடை அப்படியே இருக்கு உன்கிட்ட. எத்தனைடா தம்பி புடிச்சீங்க?"
"தெரிலம்மா கைல அம்புட்டத கொண்டு வந்தோம்"

'டெட்டால்'(Dettol) பாட்டிலை அடிப்பட்டவன் திருப்பி கொடுக்க, வாங்கியாவாறே என்னுடைய பாட்டி
"தம்பிங்களா ஒரு நாலு கொக்கு கொடுப்பா, புள்ளைங்க இருக்கானுங்க விரும்பி சாப்புடுவானுங்க"
"இல்ல இல்ல பாட்டி எங்களுக்கே இது போதாது, எங்க கூட்டாளிங்க எல்லாம் இருக்கானுங்க அவங்களுக்குனா கொடுக்கணும், நீங்க வேணும்னா இன்னும் நிறையா வந்து உட்காரும் பசங்கள போய் புடிச்சிக்க சொல்லுங்கம்மா" என்றான் கொஞ்சம் பருத்த உடல் கொண்டவன்.

"டேய் காசி மொவனே நீயாச்சும் சொல்லேன், உங்கப்பன் இன்னைக்கு நேத்து பழக்கமா?" என்று என் பாட்டி ஆரம்பிக்க அவர்கள் காதிலே வாங்கதவர்களாய் தூரலிலேயே புறப்பட்டனர்.
"கட்டைல போரவனுங்க, திங்குறது செரிக்குமா, பாவிப் பயலுக, புள்ளைங்க ஆசையா பாக்குதேன்னு தானே கேட்டேன், ரெண்டாவது கொடுத்துட்டு போலாம்ல அம்புட்டையும் தூக்கிட்டு போறானுங்க" வசைப் பாடத் துவங்கினாள் பாட்டி.

நாளிதழில் வந்த செய்தியை மறுபடியும் படிக்கிறேன்

டிசம்பர்-26 கும்பகோணம், விலங்கியல் ஆர்வலர் மற்றும் முன்னாள் வட்டாச்சியர் கோபிநாத் கொடுத்த தகவலின் அடிப்படையில், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த ரவி, பாஸ்கர், மருதகாசி, மணி மற்றும் சங்கர் ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களுடைய பைகளில் இருபதுக்கும் மேற்ப்பட்ட கொக்குகள் உயிரோடு இருப்பது தெரிந்து அவர்களை போலீசார் கைது செய்து கொக்குகளையும் உயிரோடு கைப்பற்றினர். பின்பு இவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டனர்.
தேசிய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் அபூர்வ வகை 'கிரேட் ஈக்ரெட்' கொக்குகளை பிடித்து துன்புறுத்தியதற்க்காக ஐந்து பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டனை என தீர்ப்பளித்தார் நீதிபதி ஜவகர். பொது நலனில் அக்கறை கொண்ட கோபிநாத் அவர்களையும் பாராட்டினார் நீதிபதி. கொக்குகள் தீயணைப்பு துறையினர் மூலம் பறவைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
என்ற செய்தியுடன் அந்த ஐந்து பேருடைய புகைப்படமும் குழுவாக கருப்பு வெள்ளையில் இடம்பெற்று இருந்தது.

இதனைக் கண்டவுடன் தான் அதிர்ச்சி அடைந்தேன்.

ஒருவேளை என் பாட்டியும் இதில் மாட்டி இருந்தால் என் குடும்ப மானம்? என்னவாகி இருக்கும்!.

தினக்கூலியான அவர்களுக்கு இந்த தொகை பெரிதானதாக இருக்குமே!

அழிந்து வரும் இனம் என அறியாமலும், சட்டங்களை தெரிந்து கொள்ளாமலும் இறைச்சிக்காக மட்டுமே வேட்டையாடும் இவர்களை போன்ற பாமர மக்களுக்கு எப்படி விளம்பரப்படுத்துவது?

இது போன்ற குழப்பமான கேள்விகள் என் மனதில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

அந்த கொக்குகளை போல் தான் இவர்களும் எதற்க்காக பிடிப்படுகிறோம் என்று தெரியாமல் பிடிப்பட்டதும்.

Saturday, April 18, 2009

பொறுத்துக்கொள்வோம் !!!!!

நடிக்க தெரியாதவரும் நடிகர் ஆவார்கள்
வங்கி பணங்கள் எல்லாம் வாக்கு பெட்டியை
நிரப்பும் தலைவரின் வருகையால் தார் சாலைகள் முளைக்கும்

காவேரி தண்ணீரும் தவறாமல் வரும்
தலைவர்களின் பேச்சில்
மக்கள் கண்ணீரும் துடைக்கப்படும்
சில தலைவர்களின் பேச்சில்

இலவசங்கள் எல்லாம் இலவச வாக்குறுதியாக வலம் வரும்
உரிமைகள் கூட பிச்சையாக வழங்கப்படும்
அதையும் வாங்கிக் கொண்டு ஆள் காட்டி விரலில் வைத்த மை
சரி இல்லை என்று சிரித்து பேசும் சிறப்பானவர்களையும் காணலாம்.

சிலையான தலைவர்கள் மாலைகளைச் சுமப்பார்கள்
சித்திரங்கள் எல்லாம் சுவர்களை மறைக்கும்
விலை மகள் எல்லாம் விற்பனை ஆவார்கள்
டாஸ்மார்க் கடை மேசையும் தொண்டனின் வயிறும்
ஒரு மாதம் நிரம்பி வளியும்.

தினம் ஒரு தொகுதி என்று தொலைக்காட்சிகள் தொல்லை கொடுக்கும்
வாழ்க கோசங்களும் வாழ்த்து போஸ்டர்களும் வலம் வரும்
சில மேடைகளில் வாக்குறுதிகள் வீசப்படும்
சில மேடைகளில் செருப்பு வீசப்படும்

பல மேடைகளில் மத ஒற்றுமைக்கு மரியாதைக் கூடும்
சில மேடைகளில் ராமரும் பாபரும் வம்புக்கு வருவார்கள்
இந்தியாவின் நாளைய ஆணி வேர் நான்தான் என்று
நேற்றைய காளான்கள் நெஞ்சை நிமிர்த்தும்.

என்னை போன்றவர்களின் சில தத்துவ எழுத்துகளும் தவறாமல் வரும்
இந்த கொடுமைகள் எல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும் தானே வரும் பொறுத்துக்கொள்வோம் !!!!!